
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 30. பசு
பதிகங்கள்

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.
English Meaning:
Jnani is the Mature JivaThe learned cows (Jivas) may wander belfowing,
The power-giddy cows may strut about,
Their insignia displaying;
But precious is a pot of milk (Jnana),
The good mature cows (Jnani`s ) yield;
The rest are but barren cows indeed.
Tamil Meaning:
கருவுறும் பருவம் வாயாத இளம் பசுக்கள் இனச் சார்பால் கதற மட்டும் தெரிந்து கொண்டு, கன்றை ஈன்ற பசுக்கள் தம் கன்றினை அழைக்கக் கதறுவதுபோலத் தாமும் கதறித் திரியும். கன்றை ஈனாது கருவுற்று மட்டும் உள்ள பசுக்கள் தமக்குரிய புல்லை விடுத்து மனிதர்க்கு உயிர பயிரில் சென்று மேயாதபடி அதன்தலைவன் புல்வெளியில் ஓரிடத்தில் முளையடித்து நீண்ட கயிற்றால் கட்டி வைக்க, அக்கயிற்றின் அளவிற்கு அவை கட்டில்லாதது போலத் தம் விருப்பப்படி சென்று புல்லை மேயும். எனினும் கன்றை ஈன்று தாய்மையை எய்திய பசுக்களே ஒன்று ஒரு குடம்போல நிரம்பப் பால் பொழியும் பசுக்களாகும். அவை தவிர மேற்சொன்ன மற்ற இருவகைப் பசுக்களும் பயன்படாத பசுக்களாகவே இருக்கும்.Special Remark:
இம்மந்திரம் ஒட்டணி, ``கற்ற பசுக்கள்`` என்பதனால், நூலை மட்டும் கற்றுப் பரிபாகம் இன்மையால் அந்நூலை மட்டும் இளஞ் சிறார் காதற் பாட்டுக்களைப் பாடி அவற்றிற்கேற்ப நடித்தல் போலப் படித்துப் பொருள் விரிக்கின்றவர் குறிக்கப்பட்டனர். ``கதறித் திரி யினும்`` எனப்பின்னர் வருதலால், ``கற்ற`` என்றது, கதறக் கற்றதனையே குறித்தது. பசுக்கள் வாயொலி செய்தலை, `கதறல்` என்றல் மரபு.கொற்றம் - வெற்றி. பசுக்களுக்கு வெற்றியாவது மலட்டுத் தன்மையின்றிக் கருவுறுதல். `கொற்றப் பசுக்கள்` என்னு சந்தி ஒற்று எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. குறி - முளை. கட்டி - கட்டப் பட்டு. `குறியில் கட்டி` என உருபு விரிக்க. `கருவுற்றுக் குறியில் கட்டப் பட்டு மேயும் பசுக்கள்` என்றதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்திக்கும் நிலையில் உள்ளவர் குறிக்கப்பட்டனர். அவரைப் பொய்ந்நெறியில் சென்று இரண்டும் கெட்டவர் ஆகாதபடி ஆசிரியர் தம் ஆணைவழி நிற்பித்தலே, `குறி கட்டி மேய்தல்` என்பதனஆல் குறிக்கப்பட்டது. எனவே ``கொற்றம்`` என்றது ஆசிரியரால் ஆட்கொள்ளப் பட்டமையைக் குறித்ததாம்.
``உற்ற`` என்பதற்கு, `கன்றை` என்பது வருவித்து, `கன்றை உற்ற பசுக்கள் என்க. `தாய்மை எய்துதல்` என்பதனால், ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்த பின்பு தெளிதலையும், நிட்டை கூடுதலையும் உடையராதலைக் குறித்தது.
``பால்`` என்றதனால், பரஞானம், அஃதாவது அனுபவஞானம் குறிக்கப்பட்டது. ``ஒருகுடம் பால்`` என்றதனால் `நிறைந்த ஞானம்` என்பது குறிக்கப்பட்டது.
போதுதல் - வெளிவருதல்; பொழிதல் எனவே தெளிவும், நிட்டையும் உடையவரது ஞான நிலை அயலார்க்கும் இனிது விளங்குதல் பெறப்பட்டது.
வறள் - வறட்சி; பால் சிறிதும் சுரவாமை. மலட்டுப் பசுக்களும் கதறித் திரிவனவற்றுள் அடங்கின.
இதனால், `சீவர்கட்குப் பசுத்துவம் மலபரிபாகம் காரணமாக இருவினை யொப்புச் சத்தி நிபாதமும் வாய்க்கப்பெற்று, ஆசிரியரது அருள்மொழியைக் கேட்டுச் சிந்தித்தலேயன்றித் தெளிவும், நிட்டையும் எய்துதலானே நீங்கும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage